கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குழப்பம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

10 கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதலில் கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறை மற்றும் பல இடங்களை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

புனர்வாழ்வு நிலையம்

புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும் மோதலை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களும் சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, நேற்று காலை தப்பியோடிய 20 பேர் கொண்ட கைதிகள் சோமாவதி புனித யாத்திரைக்காக வந்த பேருந்தை கடத்த முற்பட்டதுடன், வர்த்தகர் ஒருவரின் 50000 ரூபாய் பணம் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகளும் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் தப்பியோட்டம்

மோதலின் போது புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தப்பியோடிய 20 கைதிகளையும் கைது செய்யப்பட்ட 14 கைதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 34 கைதிகளும் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இராணுவமும் பொலிஸாரும் இணைந்து புனர்வாழ்வு நிலையத்தில் நிலைமையை முற்றாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் மோதல்களில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளனர்.