பெண் வைத்தியரை தவறான முறைக்கு உட்ப்படுத்திய வைத்தியர் கைது!

பெண் வைத்தியர் ஒருவரை வைத்தியசாலையில் வைத்து தவறான முறைக்கு உட்படுத்திய ஆண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்று(08.02.2024) அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குமூலம் பதிவு

கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்ல, அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை தவறான முறைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதே வைத்தியசாலையில் சேவையாற்றும் ஆண் வைத்தியரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் தந்தை கேகாலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்தே திருமணமான 45 வயது ஆண் வைத்தியரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

மேற்படி பெண் வைத்தியர் இடமாற்றம் பெற்று கடந்த 5 ஆம் திகதியே அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரிடமும் சம்பவம் இடம்பெற்றபோது கடமையில் இருந்த ஐவரிடமும் வாக்குமூலங்களைப் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்துக்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.