வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதியலில் ஒருவர் பலி!

வீதியில் நெல் உலர்த்துவதற்காக நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இன்று (11.2.2024) இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 அதிக பனி மூட்டம்

கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் வீதியில் இன்று காலை ஐந்து மணியளவில் நெல்லை உலர விடுவதற்காக பரவிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதி விபத்துக்குள்ளானது.

பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை, அதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திடீர் மரண விசாரணை
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.