கச்சதீவு அந்தோனியார் ஆலய பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெறவுள்ளது.

யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மேற்படி விடயம் தொர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனால் முக்கிய விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்று வெளியிப்பட்டுள்ளது.

இறங்கு துறை

குறித்த அறிக்கையில், பெப்ரவரி 23 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.

எனினும், கச்சதீவுக்கான படகுச் சேவையானது குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்கு துறைகளில் இருந்து பெப்ரவரி 23 ஆம் திகதி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூபா 1500 அறவிடப்படவுள்ளது. இந்நிலையில், கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடுகளுடன் வருகை தருதல் வேண்டும்.

மேலும், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப் பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.