சிறைக்குள் போதைப்பொருட்களை அனுப்பிய நபர்கள் கைது!

மெகசின் மற்றும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் வழங்க முயற்சித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை பார்வையிட வந்த நபர் ஒருவர் பல் குச்சியில் 3,410 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்துள்ளார்.

மேலும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த பெண் மற்றும் ஆண் ஒருவரும் பல் குச்சியில் மறைத்து 3,140 மில்லி கிராம் ஐஸ் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மெகசின் மற்றும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் சந்தேகநபரை பார்ப்பதற்காக வந்தவர்கள் சொக்லேட் பிஸ்கட் பொதியில் அனைத்து பிஸ்கட்டுகளிலும் புகையிலை துண்டுகளை கவனமாக மறைத்து வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.