சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்த பெண்!

  ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22) மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்ட வட்டவளை பொலிஸார் துணி ஒன்றில் சுத்தி புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

கொழும்பில் வைத்து  கைது

சிசுவை பெற்ற தாய் தலைமறையாகிருந்த நிலையில் அவரை கொழும்பில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அந்த பெண்ணின் கணவர், மகள் ஒருவர் மற்றும் குழி பறிக்க உதவிய பக்கத்து வீட்டுக்காரரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த தாய் டயகம பிரதேசத்தை சேர்ந்த (37) வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள சிசு முறைக்கேடாக பெற்றெடுக்கப்பட்ட சிசுவா? சிசு பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பகுதியில் குழி பறித்து புதைக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை செய்து வருகின்றனர்.

அதேநேரத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சிசு புதைக்கப்பட்டு ஆறு மாதங்களாகியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், மீட்கப்பட்ட சிசுவின் உடல் பாகங்கள் உடல் கூற்று பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.