நிலவின் தென்துருவத்தில் கரையொதுங்கிய விண்கலம்!

அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனியார் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும் என கூறப்படுகிறது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவுக்கு சொந்தமான விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய அளவிலான சமிக்ஞை

டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரிலுள்ள தனியார் நிறுவனம் அனுப்பிய ஒடிஸியஸ் விண்கலமே (Odysseus lander) இவ்வாறு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளது.

நாசாவின் நிதியுதவியுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் நிலவு குறித்து ஆய்வு செய்யப் பல வகை ரோபோக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தில் இருந்து சிறிய அளவிலான சமிக்ஞை கிடைப்பதாக நாசா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும், ஒடிஸியஸ் விண்கலம் தற்போது முழுமையாகச் செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சந்திரனின் தென் துருவம்

அறுகோண வடிவில் அமைந்துள்ள இந்த விண்கலம் நிலவின் அருகே சென்றதும் தனது வேகத்தைப் பல மடங்கு குறைத்துள்ளது.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மிக மெதுவாகச் சென்ற குறித்த விண்கலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்கியது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இந்த விண்கலம் தரையிறங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.