வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் சிறைச்சாலையில் தொடரும் உண்ணாவிரதம்!

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, இன்றையதினம்(14) வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்வையிட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் தமக்கான நீதி வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகின்றது.

கைதுசெய்யப்பட்ட எட்டு பேரில் ஆலய பூசாரியார் ,மற்றும் தமிழ்ச்செல்வன், கிந்துயன், தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலிப்காந் ஆகியோர் இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டதுடன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை உறுதிப்படுத்தியிருந்தனர்.