சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலையானார் மைத்ரி!

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக கூறியமை தொடர்பில் இன்று திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள அவர் வாக்குமூலம் வழங்குவுள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக கடநத 15 ஆம் திகதி முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.

உடனடி விசாரணை

அத்துடன், தமது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் பட்சத்தில் இந்த தாக்குதல் தொடர்பான உண்மைகளை நீதிமன்றிடம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் இருந்து பல எதிர்ப்புக்க்ள வெளியிடப்பட்டதோடு, அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

மைத்திரியின் அரசியல் நகர்வு 

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகளுக்காக மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, இந்த வார இறுதியில் சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும், கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.