யாழில் இருந்து கொழும்பு சென்ற நபர் கடத்தப்பட்டு கொள்ளை!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் கையிலுள்ள மோதிரம் மற்றும் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஊடக வகுப்புக்களை நடத்திய நபர் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சென்றுள்ளார். கொழும்பில் வைத்து மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு அவர் கையிலுள்ள மோதிரம் பணம் என்பவை கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அறியதந்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு கொழும்பை வந்தடைந்தேன்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

மனைவியை பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தேன். பின்னர் அலுவல் ஒன்றுக்காக அன்று பிற்பகல் கோட்டைக்கு வந்தேன்.

அங்கு எனது அலுவல்களை முடித்துப் பின்னர் புதிய ஆடைகளையும் கொள்வனவு செய்து கொண்டு மீண்டும் மனைவியிடம் செல்வதற்கு மாலை 6.45 அளவில் தயாரானேன்.

அப்போது கோட்டை போஹாவச் சந்தியில் ஓட்டோவில் வந்த ஒருவர் என்னை எங்கு போகப் போகிறீர்கள் என்று கொச்சைத் தமிழில் கேட்டார்.

பம்பலப்பிட்டிக்குச் செல்ல வேண்டும் என நானும் கூறினேன். பதிலுக்கு அந்த ஓட்டோக்காரரும் ‘வாருங்கள் நான் பாணந்துறைக்குதான் போகின்றேன். வழியில் பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுகின்றேன் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்’ என்று சொன்னார்.

நானும் நம்பிக்கையாக அவருடைய ஓட்டோவில் ஏறிப் பயணம் செய்தேன். அங்கிருந்து மருதானை வரும் வரையும் என்னுடன் மிக நட்பாக உரையாடினார்.

மருதானைச் சந்தியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் நிறுத்திவிட்டுக் ‘கொஞ்சம் இருங்கள் பியர் வேண்டி வருகின்றேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றவர் சில நிமிடங்களில் பியர் போத்துல் ஒன்றுடன் வந்தார்.

அதற்கிடையில் மேலும் ஒருவர் அங்கு வந்து அந்த ஓட்டோக்காரருடன் மிக நட்பாக உரையாடிவிட்டு அருகில் நின்றார். ஓட்டோக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து கொஞ்சம் குடியுங்கள் என்று என்னை அந்த ஓட்டோக்காரர் கேட்டார்.

ஆனால் நான் அதற்கு மறுத்தேன். எனது மனைவி வைத்தியசாலையில் உள்ளார். நான் அங்கு போக வேண்டும். என்னை பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுங்கள் என மிகவும் தாழ்மையாக அவரிடம் வேண்டினேன்.

அப்போது அவருடைய பதில் என்னை கொஞ்சம் அதட்டியது. இதனால் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாது என்பதையும் நான் அப்போது உணர்ந்து கொண்டேன்.

ஏனெனில் ஓட்டோவைச் சுற்றி இருவர் அங்கு நின்றதைக் கண்ணுற்றேன். அந்த இருவரும் அவருடைய அடியாட்களாகவே இருக்கும் என்று கருதி நான் அந்த ஓட்டோக்காரரை எதிர்க்க விரும்பவில்லை.

பானத்தை பலாத்காரமாகப் பருக்க வைத்தனர்

முடிந்தவரை அவருடன் சமரசம் செய்து அங்கிருந்து விடுபட முயற்சித்தேன். மனைவி வைத்தியசாலையில் என்று கூறி மிகவும் இரந்து கேட்டேன். ஆனாலும் அவர் என்னை விடுவதாக இல்லை.

அவரிடம் இரக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. பானத்தை பலாத்காரமாகப் பருக்கினார் கண் இமைக்கும் நேரத்தில் அவர் எனது கழுத்தைப் பிடித்து ஒரு சிறுதுளி பாணத்தைப் பருக்கினார்.

அதன் பின்னர் ஓட்டோவை அவர் பொரள்ளையை நோக்கிச் செலுத்தினார். பொரள்ளை வரையும் எனக்கு சற்று மயக்கமாக இருந்தது. அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்றார்.

பின்னர் அம்பூலன்ஸில் தான் ஏற்றப்பட்டதைச் சற்று உணர்ந்ததாகவும் அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை பகல் வரை தான் எங்கு இருக்கிறேன் எனத் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தனது துயரத்தை மேலும் விபரித்தார்.

அத்துடன் தனது கையில் இருந்த இரண்டு தங்க மோதிரங்கள், கை மணிக்கூடு, கைப் பையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், ஐம்பது ஸ்ரேலிங் பவுண்ஸ் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதியான புதிய ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதை தெரிந்து கொண்டேன் என்பதையும் வேதனையுடன் விபரித்தார்.

பொலிஸார் அறிவுறுத்தல்
ஏரிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை மனைவி கூறிய பின்னரே அறிந்து கொண்டதாகவும், கடவுச் சொல்லை எப்படி பெற்றார்கள் என்று தனக்கு புரியவில்லை என்றும் விபரித்தார். மொத்தமாக சுமார் ஏழு இலட்சம் ரூபாவரை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கொழும்பில் மிகச் சமீபகாலமாக இவ்வாறான கடத்தல் சம்பங்கள் இடம்பெறுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடருகின்றன. கொழும்புக்கு வரும் மக்களை மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.