அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பிரபல நடிகை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடுகளில் நடிகை பியூமி ஹங்சமாலி ஈடுபடுவதாக சந்தேகங்கள் எழுவதாக வும்,இது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரி, என்னால் நாட்டுக்கு என்ற அமைப்பினால் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவுக்கு நேற்றையதினம் சென்ற குறித்த அமைப்பின் செயற்பாட்டாளர் சஞ்சய மகவத்த இந்த முறைப் பாட்டை செய்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சஞ்சய மக வத்த,

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல்வாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணமும் வெளியில் வருகின்றது.

இந்த விடயத்தில் பியூமி ஹங்சமாலி என்பவர் மீது எங்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன. கோத்தாபய ராஜபக்ஷ பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக ஜீப் தற்போது பியூமி ஹங்சமாலியிடமே உள்ளது.

ஒன்று அவர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இருந்து கொள்வனவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் கோத்தாபய ராஜபக்ஷ அவருக்கு அதனைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இது அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

இதேவேளை பியூமி ஹங்ச மாலி அதனை கொள்வனவு செய்திருந்தால் அவருக்கு 10 கோடி ரூபா எங்கிருந்து வந்தது.

முகத்துக்கு பூசும் கிறீம் விற்கும் அவரால் எப்படி இந்தப் பணத்தை சம்பாதித்திருக்க முடியும். சொகுசு வீட்டில் இருக்கின்றார். இதனால் அவரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை சலவை செய்து வெள்ளையாக்க இவ்வாறான நடிகைகளை பயன்படுத்துகின்றனரா? என்ற சந்தேகங்கள் உள்ளன. இதனால் இது தொடர்பில் நியாயமான விசாரணையை கோரியே நாங்கள் முறைப்பாட்டை செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.