14வயது சிறுமியை திருமணம் செய்தவதாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (2024.04.30) உத்தரவிட்டார்.

காதலித்து திருமணம்
திருமணம் முடித்து ஒரு பிள்ளைக்கு தந்தையான சந்தேகநபர், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், 3 வழக்குகளுக்கான நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இவர்,

14 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, அவரை கடந்த 10ஆம் திகதி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி செய்த முறைப்பாட்டுக்கமைய, நேற்று குறித்த நபரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.