பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் சினிமா பாணியில் மிரட்டும் தந்தை!

கொழும்பு பன்னிபிட்டிய பிரதேசத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, தந்தை அச்சுறுத்தும் பாணியில் கடும் அழுத்தத்தை கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

திருமணமான பின்னர் தம்பதிகள் இருவரும் பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் உள்ள இளைஞனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

எனினும் அங்கு , தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாமல் இருவரும் துபாய் சென்ற நிலையில் அங்கும் வந்து பெண்ணின் தந்தை தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டிலும் வாழ விடாது மிரட்டல்
இதனியடுத்து தம்பதியினர் மீண்டும் நாட்டுக்கு வந்து வீரமாவத்தை வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தின் பின்னணியில் கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் மூவர் வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போது வீட்டில் இருந்த இளைஞனின் தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதுடன் , அவரை அச்சுறுத்தி இளைஞனின் புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்று பிற்பகல், இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமான தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்
பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.