முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் (Mullivaikal) 2009ஆம் ஆண்டு மே 18 தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன படுகொலையையிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதிவரை கஞ்சிவாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்று (17.05.2024) வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

முறிகண்டி 

இந்நிலையில், முறிகண்டியில் மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு 

பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஆறாவது நாளாகவும் மட்டக்களப்பில் (Batticaloa) முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் 

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் இன்று வழங்கப்பட்டுள்ளது.

மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கும் நிகழ்வினை குருநகர் கர்த்தர் ஆலயத்திற்கு முன்பாக வேலன் சுவாமிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், ‘இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை இலட்சம் மக்களுக்கு மேல் இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டள்ளனர் எனவும் இவ்வாறு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.