யாழில் இளம் வைத்தியர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் 30 வயதான பிரேமேந்திரராஜா கிரிசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம் (12-06-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வருகின்றனர்.

குடும்பத்தினரின் மூட நம்பிக்கையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செல்வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், குடும்பத்தில் ஒரே மகனாவார். நேபாளத்தில் மருத்துவ கல்வியை முடித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக, காதல் தொடர்பில் இருந்து வருகிறார். அவரது காதலியும் வைத்தியராவார்.

உயிரை மாய்த்த வைத்தியரின் ஜாதகப்படி இப்போதைக்கு திருமணம் செய்யக்கூடாது என தாயார் தடுத்து வந்ததாகவும், மேலும் 3 அண்டுகளுக்கு பின்னரே திருமணம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், உடனடியாக திருமணம் செய்ய காதலி விரும்பியிருந்தார். இந்த மன அழுத்தத்திலிருந்தவர் இன்று உயிரை மாய்த்துள்ளார்.

வைத்தியர்களின் தங்கும் விடுதி அறைக்குள், மயக்க மருந்தை தனது கால் விரல்களுக்குள் செலுத்தி விட்டு, அறையை பூட்டிவிட்டு படுத்துள்ளார்.

அவர் கடந்த சில நாட்களின் முன்னரே, சத்திர சிகிச்சைக் கூடத்தில் மயக்க மருந்து செலுத்துவது குறித்து, தொடர்புடைய வைத்தியர்களிடம் நுணுக்கமாக கேட்டறிந்துள்ளார்.

அவரது தங்கும் விடுதிக்குள் மயக்க மருந்து போத்தலின் மூடி என கருதப்படும் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இருப்பினும், மருந்து போத்தல் காணப்படவில்லை. தற்கொலைக்கு முன்னதாக வைத்தியர் அதை மறைத்திருக்கலாமென கருதப்படுகிறது.

தற்கொலைக்கு முன்னதாக, வைத்தியர் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதையடுத்து, காதலி பருத்தித்துறை ஆதார வைத்தியசலையிலுள்ள மூத்த வைத்தியரொருவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

இருப்பினும், அறிமுகமற்ற இலக்கத்திலிருந்து வந்த அழைப்பென்பதால் அந்த வைத்தியர், அந்த அழைப்பு குறித்து அக்கறை காண்பிக்கவில்லை.

சற்று நேரத்தின் பின்னரே, அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது, தற்கொலை விவகாரத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்தியரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வைத்தியரின் தங்கும் விடுதிக்கு விரைந்துள்ளனர்.

அங்கு வைத்தியர் படுக்கையில் காணப்பட்டார். பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதற்குள் வைத்தியர் உயிரிழந்திருந்தார்.

வைத்தியரின் அருகில் திறந்த நிலையில் பேனா ஒன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.