யாழ் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் கைது!

யாழ்ப்பாணம்(Jaffna) பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று(17.06.2024) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறந்த பிடியாணை
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 3.800 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கபட்டுள்ளார்

இவர் யாழ் மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் 12ஆம் திகதி குறித்த கைதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார். இதன் காரணமாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.