அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் நேற்று (13.02.2024) நடைபெற்றது.
கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துக்கொண்டார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை (15.02.2024)ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இன்றைய கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்ட நடவடிக்கையின் போது 1.1 மில்லியன் மேன்முறையீடுகள் நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்றன.
அவற்றில் வடக்கு மாகாணமே முதலாவதாக மேன்முறையீட்டு விசாரணைகளை நிறைவு செய்து பயனாளிகளின் தரவுகளை இற்றைப்படுத்தியதாக இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் தரவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதனூடாக புதிய பயனாளர்களை தெரிவு செய்வது இலகுவாக அமையும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இதன்போது தெரிவித்தார்.
இந்த திட்டத்தை மேற்பார்வை செய்வதனூடாக உரிய இலக்கை அடைய முடியும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிலையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.