45 கிலோ ஹெரோயினுடன் ஜவர் கைது!

1,152 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்று ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கைக்கு மேற்கே சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பல நாள் மீன்பிடி படகுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 23-33 வயதுடைய கந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினர் மீன்பிடி படகினை காலிக்கு கொண்டு வந்து சோதனையிட்ட போது, ​​இரண்டு மூடைகளினுள் 40 பொதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஹெரோயின் தொகையினை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

இதன் எடை 46 கிலோ 116 கிராம் என கடற்படை தெரிவித்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் தொகை, சந்தேகநபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

புதிய அமைச்சரவைக் கூட்டம்!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வார இறுதிக்குள் இந்த இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வரையிலான பதவி நிலைகளை வகிக்கும் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ள அதிகாரிகள் தொடர்பிலான பட்டியல் பொதுப்பாதுகாப்பு அமைச்சினால் தேசிய பொலிஸ் ஆணைக்கழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எதிர்வரும் 20ஆம் திகதி தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம்
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் கடமையாற்றிய அதிகாரிகள், வினைத்திறன் இன்றி செயற்படும் அதிகாரிகள் ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி பதவியிலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உயர் அதிகாரிகளுக்கான இடமாற்றத்தின் பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

யாழ் கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற உத்தரவு!

யாழ்.பருத்தித்துறையில் உள்ள கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறிமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ் உத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 19.11.2024

மேஷம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனபழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.

கடகம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கன்னி

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். மகிழ்ச்சியான நிலை உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

தனுசு
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை . அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்லவரன் அமையும். வாகனபழுதை சரி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிலிண்டரின் தேசிய பட்டியல் ரவி கருணாநாயக்கவுக்கு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது.

அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மற்றைய தேசிய பட்டியல் உறுப்பினர் தெரிவு குறித்து விரைவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

2024 பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளைப் பெற்று 2 தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக தமிழ் பெண்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் மனைவி கொலை கணவன் கைது!

கனடாவின் ஒஷாவா பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். டர்ஹம் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

48 வயதான பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வீட்டில் கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர்காப்பு முதலுதவிகளை வழங்கி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 41 வயதான குறித்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பிள்ளைகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

இந்த படுகொலை சம்பவம் பிரதேச மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தங்களது அதிர்ச்சியையும் கவலையையும் பிரதேச மக்கள் வெளியிட்டுள்ளனர்.

வாழைக்குலை தகராறால் பறிபோன உயிர்!

மாத்தளை, இரத்தோட்டை, நாகுலியத்த பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு இரு பிள்ளைகளின் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இரத்தோட்டை, நாகுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா பெறுமதியான வாழைக்குலையை திருடிய சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டதாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், வாழைக்குலையை திருடியதாக சந்தேகிக்கப்படும் அயல் வீட்டவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றும் விசேட போக்குவரத்து சேவை !

இலங்கையில் பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக இன்றும்(18) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இயங்குகின்றன.

அதேவேளை ரயில் சேவைக்கு மேலதிகமாக சில சிறப்பு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்புக்கு வருவதற்காக பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பஸ்களை இன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.