இன்றைய ராசிபலன்கள் 02.11.2024

மேஷம்:

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளின் வருகையால் உற்சாகமும் செலவுகளும் ஏற்படக்கூடும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய் வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அதனால் ஆதாயமும் உண்டாகும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்:

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக் கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி:

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலாம்:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

இன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கும்பம்:

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனம்:

இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சில விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாகத் தேடிய பொருள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஹட்டன் டிப்போ தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளது!

ஹட்டன் டிப்போ இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தீபத்திருநாளை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். 

இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனிலிருந்து மலையக நகரங்களுக்கும், தலைநகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் நேற்று (31) வரை மேற்குறிப்பிட்ட வருமானத்தினை ஈட்டியுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் கடந்த வருட தீபாவளியினை ஒப்பிடும் போது இம்முறை வருமானம் குறைந்துள்ளதாகவும் அதற்கு காரணம் கொழும்பிலிருந்து ஏனைய காலங்களில் வந்த அளவுக்கு இம்முறை வருகை தரவில்லை என்றும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டமையும் காரணம் எனவும் அவர் இதன் போது சுட்டிக் காட்டினார்.

இதன் அடிப்படையில் கடந்த 27 ஆம் திகதி 2,679,384 ரூபாவும், 28 ஆம் திகதி 2,929,280 ரூபாவும், 29 ஆம் திகதி 3,377,102 ரூபாவும், 30 ஆம் திகதி 3,471,211 ரூபாவும், நேற்று 3,979,812 ரூபா வருமானமாகவும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பன்றி பண்ணைகள் தொடர்பான அவசர அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்திற்கு பதிவு செய்து தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் கோருகிறது.

இலங்கையில் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு முதல்முறையாக ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்தே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பன்றிக்காய்ச்சல் நிலை முதலில் மேல் மாகாணத்தில் பதிவாகியதாகவும், தற்போது ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இது பதிவாகியுள்ளதாக மேல் மாகாண கால்நடை மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே. சரத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் சாரதிகளுக்கான எச்சரிக்கை!

பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும்.

அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 1 ஆம் திகதி முதல் 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, குளிர்காலத்துக்கு ஏற்ற, இலகுவில் வழுக்காத டயர்களை வாகனங்களில் பயன்படுத்த வேண்டும் அல்லது, அனைத்து பருவகாலத்துக்கும் ஏற்ற டயர்களை பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

M+S எனப்படும் சகதி மற்றும் பனியினை எதிர்கொள்ளும் திறன்கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் எனவும், பிற மாவட்டங்களில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் செல்பவர்களும் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கந்தஷஷ்டி விரதம் நாளை ஆரம்பம்!

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்

கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே

தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு

மேவ வாராதே வினை

இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் (நவம்பர் 2 ) ஆரம்பமாகி, நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவடைகிறது. முருகனுக்காக பல விரதங்கள் உள்ளபோதும் வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

தமிழ் கடவுளாம் முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது.

குழந்தை இல்லாத தம்பதிகள் அழகன் முருகனை நினைந்து சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை . சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர் .

கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

தவிர்க்க வேண்டியவை

உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

நம்பிக்கையோடு விரதமிருபவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும்

முருகன் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.
பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலுக்கு சென்று அங்கேயே 6 நாட்களும் தங்கி இருப்பது வழக்கம். அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் தினமும் நீராடி விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகள்!

நாடாளுமன்றத் தேர்தல் விதிமீறல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 316 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமைய, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 788 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும், ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது!

போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மகிந்த ராஜபக்சவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

நமது அரசியல் கதை என்னவாக இருந்தாலும், அவரை மறக்க முடியாது. அவர் ஒரு யுக மனிதர்.

நாட்டை போரில் இருந்து காப்பாற்றிய தலைவரே மஹிந்த ராஜபக்ஷ.

எனவே அவரது பாதுகாப்பை நீக்குவது சரியல்ல.

2008ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பதை நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அது ஏன்… போரின் கடைசி நாட்களில் போரை நிறுத்த நினைத்தார்கள், ஏனெனில் இந்நாட்டு தமிழ் மக்கள் மீதுள்ள அன்புக்காகவோ அல்லது இந்நாட்டின் பிற இனத்தவர் மீது கொண்ட அன்பிற்காகவோ அல்ல. NGOக்களின் சகவாழ்வுக்காக.

இந்நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கவனிப்பே அன்றி வேறில்லை” என்றார்.

பல கோடி ரூபாய் போதைப் பொருளுடன் தம்பதியினர் கைது!

சுமார் 200 கோடி ரூபாய் பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் கணவன் மனைவி  ஆகியோர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று செவனகல, நுகேகலயாய, கிரிவெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தது.

இதன்போது வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், கடந்த வருடம் 30 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பிலியந்தலை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஓமல்பகே தம்மிக்க சமன்குமாரவின் சகோதரி என தெரியவந்துள்ளது.

யாழில் 34வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட வீதி!

யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (01.11.2024) நடைபெறவுள்ளது.

இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின்போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார்.

அந்தவகையில் இன்றையதினம் குறித்த வீதியானது யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

34 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள்

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பிரிவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை, நாளை (2)க்கு முன், அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை, காவல்துறை போக்குவரத்து பிரிவில் நாளை மறுதினம் (3). ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.