புற்றுநோயால் வருடாந்தம் 19,000 பேர் மரணிப்பு!

நாட்டில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கைகளுக்கு அமைவாக, இரத்தப் புற்றுநோய், நிணநீர்க் குழாய் தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய், எலும்பு தொடர்பான புற்றுநோய் போன்றன குழந்தகைளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உலகில் புற்றுநோய் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.

சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 35,000 முதல் 40,000 வரை புதிதாக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இலங்கையில் புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு சராசரியாக 19,000 இற்கும் அதிகமாக உள்ளது.

பெண்களிடையே மார்பக புற்றுநோயின் அபாயம் வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு (2023) பதிவான பெண் புற்றுநோய்களில் 26% வீதமானவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளமை தெரியவருகிறது.

ஆண்களிடையே அதிகளவாக வாய் புற்றுநோய் ஏற்பட்டுள்ளமை அறியமுடிகிறது.

2023 இல் ஆண்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய்களில் 12.6% வீதமானவை வாய்ப் புற்றுநோயாகும்.

நாட்டில் ஒரு வருடத்தில் சுமார் 1,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், 2021 ஆம் ஆண்டில், லுகேமியா, நிணநீர் குழியங்கள் தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய் மற்றும் எலும்பு தொடர்பான புற்றுநோய் உள்ளிட்ட குழந்தை பருவ புற்றுநோயின் 1,032 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அனுராதபுரம் – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி – அடிக்கடி மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் – அடிக்கடி மழை பெய்யும்

இன்றைய ராசிபலன்கள் 28.10.2024

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்:

காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்:

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்:

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கன்னி:

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆனால், போதுமான பணம் இருப்பதால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவ லகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்:

அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களு டைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர் களால் ஆதாயம் உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்:

தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்று வீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு:

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்:

இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படக்கூடும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுப விரயங்கள் ஏற்படக்கூடும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்:

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

2025ஆம் ஆண்டு சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலையீடுகள்

இதன்படி, ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசியல் தலையீடுகள் காரணமாக கடந்த காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!

இணையவழி ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில், இணையவழி ஊடாக பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அவ்வாறான பணமோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் அண்மைக்காலமாக, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன்போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இணைய வங்கிப் பரிவர்த்தனைகளில் வழங்கப்படும் 0TP அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் மற்றும் பல முக்கிய உத்திகள் மூலம் பண மோசடி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் ஒரு முறையாக பேஸ்புக், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு நபர்களை வற்புறுத்தி பணத்தை முதலீடு செய்ய வைப்பதன் ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுகின்றன.

காவல்துறையினர் அறிவுறுத்தல்
அத்துடன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினர் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பணமோசடியில் ஈடுபடுகின்றமையும் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

மேலும், சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் நடித்து பல்வேறு திட்டங்களுக்கு அழைப்பு விடுத்து பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், பொது மக்களை விளிப்புடன் செயற்படுமாறும், இணையவழி பணமோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!

பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய பெருந்தொகையான மக்கள் தினமும் வருகின்றனர்.

இதனையடுத்து, ஹட்டனில் உள்ள உணவகங்களில் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று அவசர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு, மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளர் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதாகவும், ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் தலைவரும் தமக்கு ஆதரவளிப்பதாகவும் கூறி, பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரப்படுவதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மத்தியில் தேவையற்ற தொழில்சார் அமைதியின்மையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில் புயலால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்சின் இசபெலா (Isabela), இபுகாவோ( Ifugao )உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியிடம் திலித் முன்வைத்த கோரிக்கை

நாட்டின் கலாசாரம் மற்றும் மரபுகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சர்வஜன அதிகார தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பியகமவில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வருடம் பொதுத்தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறுகிறது. 15ஆம் திகதி போயா தினம். எனவே எமது கலாசாரத்தை உணர்ந்து செயற்படுமாறு எமது ஜனாதிபதியை நாம் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். நமது கலாச்சாரத்தை உணர்ந்து, நமது மரபுகளை உணர்ந்து செயல்படுங்கள். அரசியலமைப்புக்கு எதிராக ஏற்கனவே ஒரு நாள் முன்னதாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பௌத்த மத நிகழ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதை சரி செய்து வாக்களிப்பை இன்னும் ஓரிரு நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் மற்றுமொரு பொதுக்கூட்டம் பெபிலிவெல பிரதேசத்தில் நடைபெற்றது.

இலங்கையில் முதன்முறையாக சிறுபான்மை வாக்குகளால் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு எதிராக ஏராளமானோர் வௌியே களத்தில் உள்ளனர். எனவே அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். எதிர்க்கட்சி என்றால், எதிர்க்கட்சித் தலைவர் என்றால், ஏனைய மக்களின் அரசு, எனவே நாங்கள் அந்த அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறோம்.இந்த நாட்டிற்கு ஒரு அறிவார்ந்த அரசியல், இளைஞர்களால் அங்கீகரிக்கக்கூடிய நாகரீக அரசியல் தேவை என்பதே எங்கள் விருப்பம். இந்த அரசியலுடன் நம் எவருக்கும் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. நாங்கள் உங்களை வாழ வைக்க விரும்புகிறோம்.” என்றார்.

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி விவசாயிகள் அவலம்!

மலையக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியினால் மலையகம் மற்றும் மத்திய பிரதேச விவசாயிகள் மிகவும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ள போதிலும், விலை குறைப்பின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kavirathna) தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை, கேப்பிட்டிபொல, நுவரெலியா, எம்பிலிபிட்டிய ஆகிய விசேட பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் ரோஹினி கவிரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை என்றும், அறுவடை செய்து, பொருளாதார மையங்களுக்குக் கொண்டு சென்று முன்பணம் கொடுத்தும், வருமானம் கிடைக்காத சூழ்நிலையில் விவசாயிகள் இருப்பதாகவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் நடவடிக்கை
எவ்வாறாயினும், இலஙகை முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் அரை நகர்ப்புறங்களில் காய்கறி விலைகள் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், விவசாயி பெறும் விலைக்கும் நுகர்வோர் பெறும் விலைக்கும் இடையிலான இடைவெளி மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டுமென ரோஹினி கவிரத்ன விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.