லண்டனின் இருந்து யாழ் வந்தவர் மரணம்!

லண்டனில் (London) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்த நபர் ஒருவர் மயக்கமுற்றமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்த 56 வயதான கணேசராசா தியாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 16 ஆம் திகதி லண்டனில் இருந்து கொழும்பிற்கு (Colombo) வருகை தந்து கொழும்பிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் நோக்கி வந்துள்ளார்.

பேருந்து யாழ்ப்பாணத்தினை சென்றடைந்த பின்னர் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்காத காரணத்தினால் அவதானித்த நடத்துநர் அவரை எழுப்புவதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போது அவர் மயக்க நிலையில் காணப்பட்டமையினால், 17ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (27) காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஹேக் செய்யப்படும் வாட்ஸ்அப் கணக்கள்

இலங்கையில் வாட்ஸ்அப் கணக்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையக் குற்றவாளிகள் பொதுமக்களின் கணக்குகளுக்கான அணுகலைப் பெறுவதற்கு சரிபார்ப்புக் குறியீட்டினை (OTP) பயன்படுத்துகின்றனர்.

திடீரென வாட்ஸ்அப் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதுடன், மோசடி செய்பவர்கள் பயனர்களைத் தொடர்புகொண்டு, நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ காட்டிக்கொண்டு, சரிபார்ப்புக் குறியீட்டைக் கோருவதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு ஒருமுறை சரிபார்ப்புக் குறியீட்டினை வழங்கியவுடன் குறித்த கணக்குள் மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகின்றன.

இதேவேளை, வாட்ஸ்அப் கணகை ஹேக் செய்தவுடன் அதில் உள்ள தொடர்பு இலக்கங்களுக்கு அவசர உதவியாக சிறு தொகை பணத்தை கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், அந்த பணத்தை பெற பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு இலக்கமும் ஏனையவர்களிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி, பணத்திற்காக முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 முச்சக்கர வண்டிகள் மற்றும் 9 சாரதிகள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, முகத்துவாரம், கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை சேர்ந்த கொண்ட 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவருகிறது.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த பந்தய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பந்தயத்தினால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் றாகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

எல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட உள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை வட்டாரம் மற்றும் விகிதாசார முறையில் நடைபெற்றது.

30 ஆசனங்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும் பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் சுயேட்சைக்குழு தலா 2 ஆசனங்களையும் பெற்றன.

இது தவிர, பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா ஒரு இடத்தைப் பெற்றுள்ளன.

இதன்படி, எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் இறுதி முடிவுடன் ஒப்பிடும் போது, ​​மொத்தமுள்ள 30 ஆசனங்களில் 15 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தியும், 15 ஆசனங்களையும் எதிர்க்கட்சியின் ஏனைய அனைத்துக் குழுக்களும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இவ்வாறான பின்னணியில் எல்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற முடியுமா? என இன்று ‘அத தெரண’ செய்திப் பிரிவு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையை நிறுவுவதில் பிரச்சினை இல்லை. தலைவரை தேர்வு செய்ய கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது? சமநிலை ஏற்பட்டால் இழுபறி நிலை ஏற்படுமா? அப்படி எதுவும் இல்லை. இந்த வாக்கெடுப்பு தொடர்பான அரசாணையில், உள்ளாட்சி அமைப்பில் 50% உறுப்பினர்களை எந்த கட்சி பெற்றிருந்தால், அந்த கட்சி அல்லது குழுவின் செயலாளருக்கு தலைவரை நியமிக்க அதிகாரம் உள்ளது என்பது தெளிவாகிறது. இப்போது தேசிய மக்கள் சக்தியின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் எழுதும்போது பெயர்களை அனுப்பி தலைவர் யார்? உப தலைவர் யார்? என்று கேட்டால், ஒரு முன்மொழிவில் 15-15 வாக்குகள் இருந்தால், தலைவர் தனது முடிவெடுக்கும் வாக்கைப் பயன்படுத்தி அதை வெற்றிபெறச் செய்யலாம். அல்லது அதைத் தோற்கடிப்பது சொந்த அணிக்கு எதிரானது என்றால், சபையை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

அமைச்சர் விஜிதவுக்கு சவால் விடுத்த கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பிவித்துரு ஹெல உறும்ய தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கடந்த வாரம் தெரிவித்ததைப் போன்று, இன்று (28) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை என்பதை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தார்.

2023 செப்டம்பர் 05ஆம் திகதி பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியின் உண்மைகளை ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்டவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

டட்லி சிறிசேனாவின் அரிசி ஆலையில் திடீர் சோதனை

பொலன்னறுவை (Polonnaruwa) அடுமல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் டட்லி சிறிசேனவிற்கு (Dudley Sirisena) சொந்தமான சுடு அரலிய அரிசி ஆலையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நேற்று (27) இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை

நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இந்த சோதனையின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்லி சிறிசேன, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையின் முன்னணி அரிசி ஆலையின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் கவனம் செலுத்த கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஒஸ்டின்(Lloyd Austin) வெளியிட்டுள்ள கருத்தின்படி,

“இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை ஈரான் நடத்த கூடாது. அது போன்ற தவறு இடம்பெறகூடாது.

தனது நாட்டை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது” என கூறியுள்ளார்.

ஈரானின் நலன்கள்
இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி(Abbas Araghchi) ”ஈரானுக்கு அதன் நலன்கள், அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதில் எந்த வரம்புகளும் இல்லை” என பதில் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அவ்வாறு ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் தர்ஷா குப்தா

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் சற்று டல்லடிக்கத்தான் செய்கிறது.

மூன்றாவது வாரம் கடந்துள்ள நிலையில் ரவீந்தர் முதல் வாரத்திலும் அர்னவ் இரண்டாவது வாரத்திலும் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இன்றோரு 20 நாட்களாகியுள்ள நிலையில் இன்று குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ட் செய்யப்பட்டவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாசத்துக்கு தேவையான ஆடைகளை எடுத்து வந்துள்ளேன் ஒரு மாதமாவது இருப்பேன் என்று தர்ஷா ஒரு போட்டியின் போது கூறியிருந்தார்.

அதற்கு அந்த ஆசை நிறைவேறாமல் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்நிலையில் தர்ஷா குப்தா 20 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு சுமார் 5 லட்சம் சம்பளமாக வாங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பூமியை கடந்து செல்லும் மிகப் பெரிய விண்கற்கள்

பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா (NASA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாசா நிறுவனம்,

“பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

அதன்படி 2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட இந்த முதல் விண்கல் 110 அடி விட்டம் இருக்கும். 7.31 இலட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது.

இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம். இரண்டாவது விண்கல் 2007 யூடி3 என்று பெயிரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 42 இலட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் 3ஆவது விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த மூன்றாவது விண்கல் 500 அடி விட்டம் கொண்டது.

பூமியிலிருந்து சுமார் 30 இலட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது செல்கிறது.

இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை மோதினால், அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும். மேலும் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும்.

விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல் 1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. ஆனால் இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லையென்பதால் எந்த பாதிப்புமில்லை.” என தெரிவித்துள்ளது.

யாழில் தனியே வசித்து வந்த மூதாட்டி விபரீத முடிவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியாக வாசித்து வந்த குறித்த பெண் மன விரக்தியில் இன்று அதிகாலை தவறான முடிவு எடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.