யாழ்ப்பாணத்திற்கு வந்தது இந்திய நிவாரண பொதிகள் !

இந்திய தமிழ்நாட்டு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில் வந்த நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசி, 7500 பால்மா மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன்,

இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசாங்கமும் இலங்கை வாழ் மக்களுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதோடு இது முதற்கட்டமாக ஒரு பகுதியை உலர் உணவுகளை யாழ்ப்பாணம் அடுத்து வரப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட பொதிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணப்பொதியானது கம்பகவில் 75000 குடும்பத்திற்கும், அம்பாறையில் 50000 குடும்பத்திற்கும், மன்னாரிற்கு 25000 குடும்பத்திற்கும், முல்லைத்தீவிற்கு 25000 குடும்பத்திற்கும் வழங்கப்பட திட்டமிட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.