வளிமண்டலவியல் திணைக்களத்திடமிருந்து மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழமுக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, திருகோணமலை, பொத்துவில் மற்றும் காங்கேசன்துறை ஊடாக செல்லும் கடற்பிராந்தியங்களில் இன்று மாலை 6 மணி முதல் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தாழமுக்கம் நாளைய தினம் கிழக்கு திசை நோக்கி நகரலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் தாக்கம் நாட்டில் உள்ள கடற்பிராந்தியங்களில் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை முதல் மீன்பிடி மற்றும் கடற்றொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு மீனவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.