யாழில் பொலிஸார் அராஜகம்; தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட எம்பி மற்றும் சட்டத்தரணி !

யாழில் போராட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகின்றது.

இந்நிலையில், இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தினமாக அறிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பேரணிகளை தடுக்கும் வகையில் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டனர். எவ்வாறாயினும், தடை உத்தரவை மீறி இன்று மாலை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முற்பட்ட வேளையில் போராட்டம் தொடர்ந்த நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் உட்பட 18 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். .