யாழில் தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள் கைது!

யாழ்ப்பாணம் – மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் 18, 19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த அவர், கரம்பகத்தில் திருமணம் முடித்திருந்தார்.

அவரது மனைவி 2 வருடங்களின் முன்னரே பிரிந்து சென்று விட்டார். அவர்களின் பிள்ளைகள் இருவரும், அம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தனர். தந்தையார் வீட்டுக்கு செல்வது குறைவு என்றும் தெரிய வருகிறது.

இன்று காலையில், கொல்லப்பட்டவரின் மூத்த மகன் கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் தந்தை கொல்லப்பட்டுள்ள நிலையில், மகனது காயம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

இதன்போது கையில் எவ்வாறு வெட்டுக்காயம் ஏற்பட்டது என பொலிசார் வினவியபோது, நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் வீட்டுக்கு வந்து, தம்மை வாளால் வெட்டி தப்பியோடி விட்டதாக தெரிவித்திருந்தனர்.

இது பற்றி ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லையென அவர்களிடம் விசாரணை நடத்திய போது, காலையில் பொலிசார் விடயத்தை அறிந்து வருவார்கள் என நம்பியதாக குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த இளைஞனுடன் இன்னொரு நண்பர் வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.

விசாரணையில் வெளியான தகவல்

தம்பியாரை பொலிசார் விசாரித்ததில் கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது. பொலிஸ் விசாரணையில் ,தானும், சகோதரனும், அவரது நண்பரும் (வைத்தியசாலையில் துணையாக தங்கி நின்றவர்) தந்தை தங்கியிருந்த குடிலுக்கு சென்று, கத்தியால் வெட்டிக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

இதன்போது வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள குடிலுக்கு நடந்து சென்று, இரகசியமாக 19 வயதான மூத்த மகனே, தந்தையை முதலாவதாக வெட்டியுள்ளாார்.  

இந்நிலையில் தம்பியும் வெட்டினார். தம்பி வெட்டும் போது, தவறுதலாக அண்ணனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.  தந்தை தம்மை கொடுமைப்படுத்துவதால் அவரை கொன்றதாக பிள்ளைகள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான மூத்த மகனும், அவருடன் துணையாக தங்கி நின்ற நண்பரான 19 வயதான இளைஞனும் பொலிசாரால் கைது செய்யப்பட்னர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட 19 வயதான இருவரும் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.   

Previous articleபாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை
Next articleயாழில் கொடூரம்! தந்தையை வெட்டிக் கொன்ற 17, 19 வயதான மகன்களும் நண்பரும் கைது!!