பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நால்வர் கைது!

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகின்றது.

முகமட் அஸ்வர், முகமட் அனாஸ், முகமட் ஹபீர் ஜபீர், முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.