சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் மீது இரத்தக்கசிவு ஏற்படும் வரை கொடூர தாக்குதல்..!

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் சக மாணவர்களால் கடுமையாக வயிற்றின் கீழ் உதைக்கப்பட்டு சிறுநீரில் இருந்து இரத்தம் வெளியேறியதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் நடத்திய ஐந்து மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கு விடையளித்ததாகவும், முதல் வினாத் தாளுக்கு முன்னதாக சுமார் இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும், அப்போது அவர் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 மாணவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலின் பின்னர், மாணவர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது சிறுநீர் பாதையில் இருந்து இரத்தம் வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் களுத்துறை வலய கல்வி அலுவலகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு முதல் வினாத்தாளுக்கு பதில் அளித்ததாகவும், தேர்வு முடிந்ததும் மாணவன் தனது தந்தையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முறைப்பாடு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, தலைமையக காவல்துறை பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்லா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.