யாழில் மனைவி கீழ் சாதி என அறிந்து குழந்தையுடன் கைவிட்டு லண்டன் சென்ற இஞ்சினியர்!!

லண்டனில் வாழும் தேசியப் பற்றாளர் ஒருவரால் எமக்கு அனுப்ப்பட்ட இந்த பதிவினை சில பிழைகளைத் திருத்திய பின் அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.

1990ம் ஆண்டு நடுப்பகுதி. யாழ்ப்பாணத்தில் புலிகளால் கோட்டை முற்றுகையிடப்பட்டிருந்தது. யாழ் நகரப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். யாழ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஓ.எல்.ஆர் தேவாலயத்திற்கு அண்மையில் வசித்து வந்த ஜெயந்தினி ( பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது) குடும்பமும் இடம் பெயர்ந்தனர். ஜெயந்தினியின் அப்பா கடைச்சல் பட்டறை தொழிற்சாலை ஒன்றையும் அதில் உற்பத்தியாகும் இரும்புப் பொருட்களை விற்பனை செய்வதற்காக யாழ் நகரப்பகுதியில் கடை ஒன்றையும் வைத்திருந்ததுடன் வசதி படைத்தவராகவும் இருந்தார். 20 வயதான ஜெயந்தினி யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதபிரிவில் சித்தியடைந்து தென்னிலங்கை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார். ஜெயந்தினிக்கு ஒரு அண்ணனும் இருந்தார். ஜெயந்தினி குடும்பத்தினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயந்தினி குடும்பம் இடம்பெயர்ந்து செல்வதற்கு முன் தந்தை தனது தொழிற்சாலை மற்றும் கடையில் உள்ள பொருட்களை நல்லுார்ப் பகுதிக்கு இடமாற்றிவிட்டு 1990ம் ஆண்டு நடுப்பகுதியில் அப்படியே கொழும்புக்கு சென்றுவிட்டார்கள்.

வடமராட்சி தம்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியன் (பெயரில் சிறு மாற்றம்) தென்னிலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பொறியியல் பிரிவில் கல்வி கற்று வந்தார். சிவப்பிரியனுக்கு 3 தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்தார்கள். சிவப்பிரியனே மூத்த பிள்ளை. அத்துடன் தந்தை சிறு வியாபாரி. சிவப்பிரியன் குடும்பம் வசதி படைத்தவர்கள் அல்ல. அந்நேரம் ஜே.வி.பி கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையை கை விட்டு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார். அதன் பின்னர் 1991ம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் கற்றல் நடவடிக்கையைத் தொடர்ந்தார்.

1991ம் ஆண்டு பல்கலைக்கழக இந்து மன்றத்தினரால் நடாத்தப்பட்ட நவராத்திரி விழாவில் ஜெயந்தினியும் சிவப்பிரியனும் சந்தித்தார்கள். அந்த சந்திப்பு காதலாக மாறியது. அந் நேரத்தில் சிவப்பிரியனுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அத்துடன் பெற்றோருடனான தொடர்புகளும் மிகக் குறைவாகவே இருந்தது. பெற்றோரும் வசதிபடைத்தவர்கள் அல்ல. இந் நிலையில் ஜெயந்தினியின் தொடர்பால் சிவப்பிரியனுக்கு பணத்திற்கான தேவை குறைந்தது. இருவரும் உயிருக்குயிராக காதலிக்கத் தொடங்கினர். காதலிக்க தொடங்கும் முன் சிவப்பிரியன் ஜெயந்தினியிடம் அவளது சாதி தொடர்பாக கேட்காமல் தனது சாதி வெள்ளாளர் சாதி என கூறி பல தடவைகள் ஜெயந்தினிக்கு அவளது சாதி தொடர்பாக அறிய முற்பட்டுள்ளான். ஜெயந்தினியும் தனது சாதி எது என தெரிவிக்காது தனது தந்தை ஒரு தொழிலதிபர். தமக்கு யாழ் நகரப்பகுதியில் கடை மற்றும் வீடு உள்ளது என்று மட்டுமே கூறி நழுவல் போக்கிலேயே இருந்துள்ளாள். இந் நிலையில் இருவரது நெருக்கம் காரணமாக 1992ம் ஆண்டு சிவப்பிரியன் இறுதி வருடம் கற்றுக் கொண்டிருந்த போது ஜெயந்தினி கர்ப்பமாகியுள்ளார்.

ஜெயந்தினி 2ம் வருடம் கற்றுக் கொண்டிருந்தாள். ஜெயந்தினி குடும்பத்தின் நெருக்குதல் மற்றும் ஜெயந்தினியின் அழுத்தம் காரணமாக வேறு வழியில்லாது சிவப்பிரியன் தமது பெற்றோர் உறவுகளுக்கு கூட கூற முடியாத நிலையில் ஜெயந்தினியை பதிவுத்திருமணம் முடித்துள்ளார். ஜெயந்தினி பல்கலைக்கழக கற்கையை தற்காலிகமாக கைவிட்டுவிட ஜெயந்தினியுடன் சேர்ந்திருந்த சிவப்பிரியனும் கற்கை நெறிகளை முடித்துவிட்டார்.

இந் நிலையில் சிவப்பிரியன் 1992ம் ஆண்டு இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணம் வந்த போது தான் பல்கலைக்கழக மாணவி ஒருவரைக் திருமணம் செய்தது தொடர்பாகவும் அந்த மாணவியின் தந்தை ஒரு தொழிலதிபராக இருந்தவர் என்பவற்றையும் பெற்றோருக்கு கூறிய போது அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமது மூத்த பிள்ளை இவ்வாறு நடந்துள்ளதை நினைத்து கடும் கோபமுற்றார்கள். இருப்பினும் சிவப்பிரியனின் தாத்தாவின் வேண்டுகோளின் பெயரில் ஜெயந்தினியை ஏற்க சம்மதித்தாலும் ஜெயந்தினியின் சாதி, சமயத்தை அலசி ஆராய முற்பட்டார்கள். அவர்களின் விசாரணையில் ஜெயந்தினி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இந்த தகவல் சிவப்பிரியனையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சிவப்பிரியன் ஜெயந்தினி மீது கடும் கோபமுற்றுள்ளான். இது தொடர்பாக விளக்கம் கேட்டு யாழ்ப்பாணத்திலிருந்து ஜெயந்தினிக்கு கடிதம் ஒன்றை தனது நண்பன் ஊடக அணுப்பியுள்ளான். ஜெயந்தினி கடிதத்தைப் பார்த்தவுடனேயே யாழ்ப்பாணத்திற்கு தனது தாயுடன் திரும்ப வந்துள்ளாள். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஜெயந்தினி தனது கணவனின் வீட்டுக்கே நேரில் சென்ற போது சிவப்பிரியனின் உறவுகள் அவளை துரத்தியடித்தனர். அத்துடன் சிவப்பிரியன் வீட்டுக்குள்ளே இருந்து வெளியே வரவில்லை.

ஜெயந்தினி உடனடியாக அப்போது யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய காவல்துறையிடம் முறையிட்டாள். காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்தது. சிவப்பிரியன் கைது செய்யப்பட்டான். இருப்பினும் ஜெயந்தினியுடன் வாழ்வதாக உறுதியளித்த பின்னர் அவன் விடுவிக்கப்பட்டார். இருவரும் யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் கண்காணி்ப்பில் நல்லுார் பகுதியில் வீடு எடுத்து வாழத் தொடங்கினர்.

தனது மூத்த பிள்ளை ஒடுக்கப்பட்ட சாதியைக் கலியாணம் கட்டிவிட்டான் என தெரிந்து தனது ஏனைய பிள்ளைகளுக்கு திருமணம் நடக்காது என எண்ணி சிவப்பிரியனை ஜெயந்தினியிடமிருந்த பிரிக்க சிவப்பிரியனின் உறவுகள் கடும் முயற்சி செய்தார்கள். சிவப்பிரியன் ஜெயந்தினி தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று 1993.02.22ம் திகதி கோப்பாய் அரசினர் வைத்தியசாலையில் பிறந்தது.

குழந்தை பிறப்புடன் ஜெயந்தினியின் பெற்றோரும் ஜெயந்தினியிடம் வந்துசேர்ந்து விட்டார்கள். ஜெயந்தினியின் அண்ணன் அந் நேரம் சுவிஸ்லாந்து சென்றுவிட்டார். வேண்டா வெறுப்பாகவே சிவப்பிரியன் ஜெயந்தினியுடன் வாழ்ந்து வந்தான். ஜெயந்தினி தனக்கு அவளது சாதி தொடர்பாக கூறாது மறைத்தது கடும் விரக்தியை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடன் ஜெயந்தினி திட்டமிட்டு உறவு கொண்டு மாட்டிவிட்டுள்ளாள் என சிவப்பிரியன் சிந்தித்துள்ளான். தன்னுடன் முதல் முதலாக உறவு கொள்ளும் போதும் அவளது ஆதிக்கமே அதிகமாக இருந்ததாக எண்ணி அவன் கடும் விரக்தியில் இருந்துள்ளான். பொறியியல் பட்டதாரியாக அவனுக்கு பட்டம் கொடுக்கப்பட்டது. அதன் போதும் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் பல பிணைகளை கொடுத்தே தென்னிலங்கை சென்று திரும்பி வந்தான்.

பொறியியல் பட்டதாரியான பின்னர் 1994ம் ஆண்டு வேலை வாய்ப்புக்காக கொழும்பு செல்ல முற்பட்ட போது அவனை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். இவ்வாறான நிலையில் பெற்றோரிடமும் செல்ல முடியாது ஜெயந்தினியுடனும் வாழ முடியாமல் இருந்த சிவப்பிரியனுக்கு 1995ம்
ஆண்டு இடப்பெயர்வு வரப்பிரசாதமாக அமைந்தது. சிவப்பிரியன் தன்னிடம் அன்பாக உள்ளான் என எண்ணியிருந்த ஜெயந்தினி தனது பெற்றோருடன் சிவப்பிரியனையும் கூட்டிக் கொண்டு கொழும்பு வந்தடைந்தாள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறி அவளையும் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் கற்குமாறு கூறிவிட்டு ”எஸ்கேப்”பானான் சிவப்பிரியன்.

1995ம் ஆண்டு இறுதிப்பகுதியில் சிங்கப்பூர் சென்ற சிவப்பிரியன் அதன் பின்னர் லண்டனுக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டான். ஜெயந்தினியுடன் அதன் பின்னர் தொடர்பு கொள்ளவேயில்லை.

இதன் பின்னர் பல்வேறு நெருக்கடிகள் மத்தியிலும் தனது குழந்தையை வளர்த்து வந்ததுடன் தனது கற்றல் நடவடிக்கையையும் முடித்து பட்டதாரியான ஜெயந்தினி கொழும்பில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்ததுடன் தனியார் நிறுவனம் ஒன்றிலும் முக்கிய பதவியில் இருந்தாள். தனது கணவனுடன் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாது போய்விட்டது. பாரிய இடப்பெயர்வு காரணமாக சிவப்பிரியனின் பெற்றோர் உறவுகளை அவளால் சந்திக்க முடியவில்லை.

இதே நேரம் சிவப்பிரியன் 2003ம் ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து தனது உறவுகள் அனைவரையும் வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டான். லண்டனில் வைத்தே மூத்த சகோதரியின் கலியாணம் நடைபெற்றது.

ஆனாலும் சிவப்பிரியன் மறு கலியாணம் கட்டாது வாழ்ந்து வந்தான். இவ்வாறான நிலையில் 2005ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒருதடவை சிவப்பிரியன் யாழ்ப்பாணம் வந்துள்ளான். அவன் யாழ்ப்பாணத்தில் நிற்பதாக அறிந்த ஜெயந்தினி அவனை சந்திக்க பெரும் முயற்சி செய்தும் பலனில்லாது போய்விட்டது. ஜெயந்தினி தன்னை தேடுகின்றாள் என அறிந்த சிவப்பிரியன் உடனடியாக லண்டன் திரும்பிவிட்டான்.

ஜெயந்தினி- சிவப்பிரியனுக்கு பிறந்த மகளான வைஸ்னவிக்கு ( பெயர் மாற்றம்) இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வைஸ்னவி தற்போது தென்பகுதி வைத்தியசாலை ஒன்றில் மருத்துவராக கடமையாற்றுகின்றாள். அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனும் வைத்தியர். ஆனால் சிங்களவர். வைஸ்னவிக்கு தனது தந்தை லண்டனில் என்ன செய்கின்றார், எங்கு வாழ்கின்றார் என்ற அனைத்து விடயங்களும் தெரிந்திருந்தது. லண்டனில் மேல்படிப்புக்காக சென்ற தனக்கு சீனியரான இன்னொரு வைத்தியரிடம் தனது தந்தையின் செயற்பாட்டை கூறி தனது கலியாண வீட்டுக்கு அவரை வரவழைக்க முடியுமா? என கேட்டிருக்கின்றாள்.

அங்குள்ள சீனியர்களாக இருந்த வைத்தியர்கள் சிலர் சிவப்பிரியனிடம் சென்று நிலமையை விளக்கி கூறியுள்ளனர். தனது மகளுடன் அங்கிருந்தவாறே முதல் முதலாக சிவப்பிரியன் நாக்கு தளுதளுக்க கதைத்துள்ளார்.

கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து சிவப்பிரியன் தனது மகளுடன் ஒன்றாக கொழும்பில் தங்கியிருக்கின்றார். மனைவி ஜெயந்தினி சிவப்பிரியன் கட்டுநாயக்காவில் வந்து இறங்கியவுடனேயே தனது மகளை விட்டு பிரிந்து யாழ்ப்பாணம் வந்துவிட்டார். கட்டுநாயக்காவில் இருந்து வைஸ்னவி தனது வீட்டுக்கு தந்தையை அழைத்து வந்த போது தாயார் யாழ்ப்பாணம் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இருவரையும் சேர்க்க கடும் முயற்சியில் இறங்கிய வைஸ்னவி தற்போது வெற்றியடைந்துள்ளதாக தெரியவருகின்றது. ஆம் ஜெயந்தினி தற்போது கொழும்பு சென்று கொண்டிருக்கின்றார்…. இந்தப் பதிவு வெளியாகும் போது அவர் சிவப்பிரியனிடம் சேர்ந்துவிடுவார் என நம்புகின்றேன்….