கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் வீட்டில் தனிமையில் வசித்த பெண் வெட்டிக் கொலை!

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று இன்று(12.06.2023) காலை வீட்டின் முன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுருவ எட்டவலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கொஸ்கொட படல்கே சாந்தனி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று காலை இந்த பெண் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலை சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் அம்பலாங்கொட நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும், இன்று காலை மகள் பாடசாலைக்கு சென்ற பின்னர் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், கொலைக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று நடைபெறவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.