சேருவில படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

சேருவில படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (12.06.2023) திருகோணமலை – ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் மிகவும் உணவுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

வெருகல் – ஈச்சிலம்பற்று பகுதி அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவு பொருட்களை சேருவில பகுதியிலிருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போதே இந்த படுகொலையானது இடம்பெற்றுள்ளது.

இதன்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

21 பேர் படுகொலை

மேற்படி 21 பேரும் படுகொலை செய்யப்பட்டடு இன்றுடன் 37 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்க பெறாத நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்டியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சரியான மற்றும் முறையான நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட உறவுகளினால் இன்றைய தினம்(12.06.2023) 37ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவு கூறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய யுத்த சூழலின் காரணமாக ஈச்சிலம்பற்று  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிசேனை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.

இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கத்தினால் சேருவில பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாராவாரம் வழங்கப்பட்டு வந்தன.

அந்தவகையில் 1986ஆம் ஆண்டு ஜீன் மாதம் 12ம் திகதி பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை பொது போக்குவரத்துகள் இல்லாத சூழ்நிலைகளில் ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்திலுள்ள மக்களின் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி எடுத்து செல்லுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரியவினால் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்ட நிலையில் நலன்புரி முகாம்களுக்கு பொறுப்பாக இருந்த அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி செல்வதற்காக சேருவில பிரதேசத்திற்கு சென்றார்கள்.

சிங்கள மக்கள் வாழும் கிராமம்

மேற்படி 21 பேரும் சேருவில பிரதேசத்திலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் மகிந்தபுர எனும் கிராமத்தில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் 19 தமிழர்களும் 02 முஸ்லிம் மக்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

றம்பண்டா எனும் ஊர்காவல் படைத்தலைவரின் தலைமையில் இப்படுகொலை சம்பவம் இடம்பெற்றதாகவும் இச்சம்பவத்துடன் இலங்கை இராணுவத்தினரும் தொடர்புபட்டிருந்ததாகவும் உயிர் தப்பியவர்களும், படுகொலை வெய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தெரிவிக்கின்றனர்.

அடையாள அட்டைகள் கோரப்படல்
இப்படுகொலை செய்யப்பட்டவர்களும், காயங்களுக்குள்ளாகி உயிர் தப்பியவர்களும் இரு வரிசைகளில் முழங்காலில் வைக்கப்பட்டு அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய நிலையில் காட்டுத் துப்பாக்கியினால் சுடப்பட்டும் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இப்படுகொலை சம்பவத்தை 20ற்கு மேற்பட்ட ஊர்காவற்படையும், இராணுவமும் இணைந்து மேற்கொண்டதாகவும், இறந்த அனைவரது கைகளிலும் அடையாள அட்டை இருந்ததாகவும் படுகொலையின் பின்னர் அவ்விடத்திற்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இச்சம்பவம் (12.06.1986) அன்று மதியம் 1மணியளவில் இடம்பெற்றிருந்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.