வீட்டில் தனியாக இறந்து கிடந்த முன்னாள் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை

முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஓட்டப்பந்தய வீராங்கனை பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தனது வீட்டில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவல் அவரது உடற்கூறு ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. 32 வயதான டோரி போவி என்ற ஓட்டப்பந்தய வீராங்கனையே பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மரணமடைந்துள்ளார்.

மே மாதம் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டோவில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பல நாட்களாக டோரி போவி அவரது குடியிருப்பில் இருந்து வெளியே செல்லவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தில் இருந்து நலம் விசாரிக்க சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே அவர் மரணமடைந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் கர்ப்பமான தகவல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்காக 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் போவி.

2016 ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் 4x100m ரிலே அணியில் அவர் கலந்துகொண்டார். 2017ல் லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்ட போவி 100மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.

மட்டுமின்றி 2016ல் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றார்.