யாழ் காங்கேசன்துறையில்  நவீன பயணிகள் முனையம் திறந்து வைப்பு!

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டீ சில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இன்றையதினம் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் ஒரு கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலில் வந்தடைந்த இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை அமைச்சர் அடங்கிய குழாம் வரவேற்றதோடு கப்பலின் கப்டனுக்கு நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது.

விரைவில் கப்பல் சேவை

நிகழ்வில்  கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா கூறுகையில்,

காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரத்துக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

எனினும் இராமேஸ்வர பகுதியில் சில வேலைத்திட்டங்கள் கப்பல் சேவை ஆரம்பிக்க முன்னர் முன்னெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக கப்பல் சேவினை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

எனினும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தொடர் முயற்சியின் பயனாக விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், யாழ் இந்தியத் துணைத் தூதுவர், கப்பல்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், கடற்படை உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.