வயிற்றில் கன்றிருக்க இறைச்சிக்காக கொல்லப்பட்ட பசு மாடு!

மட்டக்களப்பு – பொலன்னறுவை எல்லைப்பகுதியிலுள்ள மயிலத்தமடு மாதவனை கால்நடை மேச்சல் பகுதியில் வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று இறைச்சிக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் நேற்று காலை (18.06.2023) வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டு இறைச்சியை இனந்தெரியாத சிலர் களவாடிச் சென்றுள்ளனர்.

பின்னர் பசுவின் தலை உள்ளிட்ட கழிவுகள் மற்றும் வயிற்றில் இருந்த கன்று என்பன வீசப்பட்டுள்ள நிலையில் மாதவணை பிரதேச மகாவலி கண்கானிப்பு காரியாலயத்திற்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சம்பவங்கள்

இதுபோன்ற செயற்பாடுகள் மற்றும் மாடுகளை களவாடுதல் அல்லது காயப்படுத்துதல் என்பன இப்பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மகாவலி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முடிவில் அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்களை மகாவலி அதிகாரசபையினர் வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற கட்டளைக்கமைய குறித்த திகதிக்கு முன்னர் வெளியேற்றுவோம் என மகாவலி அதிகாரிகள் மூலம் நீதிமன்றத்திற்கு உத்தரவாதம் வழங்கிய நிலையில் இன்னும் பூரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில் இப்பிரதேசத்திற்குரிய கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இப்பிரதேசம் மகாவலி B வலயமாக பிரகடணப்படுத்தப் பட்டதன் பின்னரே இப்படியான செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.