தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்

இலங்கையில் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்துள்ளார்.

1523 அதிபர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது 978 அதிபர்கள் இருப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாடசாலைகளில் அதிபர் பதவிகளுக்கு பதில் கடமையாற்றும் அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறும் தென் மாகாண ஆளுநர், கல்வி உத்தியோகத்தர்களுக்கான 60 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.

223 கல்வி அலுவலர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது 174 பேர் இருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சு தரப்படுத்தப்பட்ட அதிபர்களை நியமித்து மாகாண சபைக்கு விடுவித்தால் அதிபர் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு அந்த அதிபர்களை நியமிக்க முடியும் என ஆளுநர் கலாநிதி வில்லி கமகே மேலும் தெரிவித்துள்ளார் .