பிரான்ளில் 17 வயது இளைஞரை பொலிஸார் ஒருவர் சுட்டுக்கொன்றதை அடுத்து நாட்டில் கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து தொடர்ந்து கலவரம் வெடித்து வருகிறது.
தனது மகன் அரபு நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருந்த காரணத்தால்தான், போலீஸ் சுட்டுக் கொன்று உள்ளது என்று நாஹெல் தாய் குற்றம்சாட்டி இருக்கிறார்.
பல இடங்களில் வெடித்த கலவரம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் அருகேநாஹெல் சுட்டுக் கொல்லப்பட்டார். தன் மீது காரை நாஹெல் ஏற்றிவிடுவார் என்ற அச்சத்தில்தான் சுட்டுக் கொன்றதாக போலீஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் பிரச்சனை அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. நாஹெல் சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளது.
போலீசாருடன் சண்டையிடுவது, கார்களை எரிப்பது, கடைகளை எரிப்பது, கடைகளில் கொள்ளையடித்துச் செல்வது என்று கலவரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது.
கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோருக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்து வருவதுடன் சமூக ஊடகங்கள்தான் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
கலவரத்தை அடக்க களத்தில் 45,000 பொலிஸார்
மேலும் கலவரத்தை தூண்டும் வகையில் இருக்கும் செய்திகளை சமூக ஊடங்களில் இருந்து நீக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கலவரம் மார்செய்ல்லி, லியோன், டவ்லவ்ஸ், ஸ்ட்ராஸ்போர்க் மற்றும் லில்லி போன்ற நகரங்களுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமையன்று சுமார் 45,000 காவல்துறை அதிகாரிகள் கலவரத்தை அடக்க களமிறக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 1,100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார் கொன்றார்களோ அதேபோன்றுதான் பிரான்சிலும் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
இதற்குக் காரணம் நாஹெல், ஜார்ஜ் பிளாய்ட் இருவரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இரண்டுமே இன ரீதியான இனவெறி தாக்குதல் தான் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.