வீதி விபத்துக்களில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு !

ஹுங்கம மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்துக்கள் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகேவ கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மோட்டார் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும், பின்னால் பயணித்தவரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஹதாவ, ரன்ன பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை சிலாபம் – குருநாகல் வீதியில் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுனஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகலில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த பேருந்து மீது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட வேளையில் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

ஹிலோகம, நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.