மட்டக்களப்பில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய முதியவர் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் போது விபத்துக்குள்ளாகி பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் விபத்துக்குள்ளான நிலையில் காணப்பட்ட நபர் அடையாளம் காணப்படாத நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் குடும்பத்தினர் அடையாளம் கண்டதை தொடர்ந்து உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
அத்தோடு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வைத்தியசாலையில் இருந்து தானாக வெளியேறி தனது வீடு நோக்கி நடந்து செல்லும் போது வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய உசனார் வெள்ளைத்தம்பி என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.