நாட்டில் வறட்சியால் உணவுப் பற்றாக்குறை ஏற்ப்படும் அபாயம்!

உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல குளத்திலிருந்து நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் மின்சாரத்தை தடை செய்ய வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உடவலவ நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டிருந்த 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் இந்த நாட்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக அழிவடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வயல்களுக்கு சமனல குளத்தில் இருந்து நீரை விநியோகிப்பது தொடர்பாக அண்மையில் மின்சார சபையின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சமனல குளத்திலிருந்து 10 நாட்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் 1 மணித்தியாலம் முதல் 03 மணித்தியாலங்களுக்கும் இடையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மக்களுக்கு உணவளிப்பது பற்றி பேச வேண்டும். அரசாங்கத்திடம் அரிசி தொகை இல்லை, நெல் கையிருப்பும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் அரிசி இருப்பு இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அதை வைத்திருக்க பணம் இல்லை. ஏனென்றால். நாம் வங்குரோத்து அடைந்த நாட்டில் இருக்கிறோம், அப்படி கூறி மக்களை பட்டினியால் மரணிக்க விட முடியாது, அதனால்தான் இந்த சவாலை நாம் அனைவரும் புரிந்துகொண்டு, இப்போது தண்ணீர் இருக்கும் இடத்தில் எதையாவது வளர்க்க கடினமாக உழைக்க வேண்டும், சோறு இல்லை என்றால் இருப்பதையாவது சாப்பிடு, வேண்டும் அல்லவா.” என்றார்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.