தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்பபிற்குரிய நவீன சிகிச்சை

இன்றைய சூல்நிலையில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தலை மற்றும் கழுத்து புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் முழுமையாக பெற்றிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோயை உரிய அறிகுறிகளின் மூலம் தொடக்க நிலையில் கண்டறிந்தால், அதனை ஒருங்கிணைந்த நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்க இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏராளமான உறுப்புகள் உடன் இருக்கின்றன. அவற்றில் வாய், மூக்கு, மூளை, உமிழ் நீர் சுரப்பிகள், காது, தொண்டை, நிணநீர் முடிச்சு பகுதிகள் ஆகியவை அடங்கும். 

இவற்றில் தெற்காசியர்களுக்கு ஓரல் கேன்சர் எனப்படும் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், பெண்களை விட ஆண்கள் எட்டு மடங்கு அதிகமாக இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அண்மை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

கழுத்து பகுதியில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், நாட்பட்ட இருமல், திடீரென்று உடல் எடை இழப்பு ,உணவு விழுங்குவதில் சிரமம், தலைவலி, முகத்தில் ஏற்படும் உணர்வின்மை போன்றவை இதன் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

புகையிலை பாவனை, மது அருந்தும் பழக்கம், முதுமை,  ஊட்டச்சத்தின்மை, கதிரியக்க பொருட்களின் வெளிப்பாடு ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு இரத்த பரிசோதனை, கல்லீரல் இயங்குதிறன் பரிசோதனை, சிறுநீரக செயல்பாட்டு திறன் பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை, ஃபைன் நீடில் ஒஸ்பிரேஷன் சைட்டாலஜி எனும் பரிசோதனை, திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.

பரிசோதனைகளின் முடிவுகளின் படி சத்திர சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை, இம்யூனோ தெரபி போன்ற சிகிச்சைகளை இணைத்து வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பர். 

இன்றைய சூழலில் சத்திர சிகிச்சைக்கு முன்னதாக கீமோ தெரபி மற்றும் இம்யூனோ தெரபி ஆகிய இரண்டு சிகிச்சைகளையும் ஒருங்கிணைந்து வழங்கி, பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள புற்றுநோய் செல்களை அழித்து அகற்றுகிறார்கள்.

Previous articleகனேடிய பிரதமரை கிண்டலடிக்கும் ஊடகங்கள்
Next articleஇன்றைய நாணய மாற்று வீதத்தின் படி