நாட்டில் வறட்சியால் 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 12 மாவட்டங்களை சேர்ந்த 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நபர் அடிப்படையில் 1,56000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 12 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள். ஆகவே 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகள் ஊடாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

வறட்சியான காலநிலையினால் 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,1 இலட்சத்து 56 ஆயிரம் நபர்கள் பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு தேவையான வசதிகளை வழங்க பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலையின் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதார பாதுகாப்பு வழங்கும் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது பொது மக்களின் அத்தியாவசிய கடமையாகும் என்றார்.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தெற்கு, வடக்கு, வடமேல், கிழக்கு ஆகிய மாகாணங்களின் நெற்பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வறட்சியால் உபரி பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.