நிலவில் மோதியது ரஷ்ய விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ஆம் திகதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ஆம் திகதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17ஆம் திகதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி லூனா-25 விண் கலத்தின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர்.

லூனா-25 விண்கலத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நிலவில் தலையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் விண்கலத்தை திட்டமிட்டபடி அடுத்த சுற்றுப்பாதைக்கு அனுப்ப முடியவில்லை.

தற்போதைய பாதையிலேயே ரஷிய விண்கலம் சுற்றி வந்தது. இந்நிலையில், ரஷியாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று லூனா 25 விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிலவில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

Previous articleகிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் தேனுஜன் தற்கொலை!
Next articleமட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி!