மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிசேனை, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தாம் தினமும் சிரமப்படுவதாகவும், குடிநீருக்காக மிக நீண்ட தூரம் பயணித்து குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டி துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவும் கடந்தகால யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்ட அம்மக்கள் தினமும் அதிகாலை வேளையில் குடிநீர் எடுப்பதற்காக மிக நீண்ட தூரம் கால் நடையாகச் செல்லும்போது காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உட்படுவதாகவும், தொடர்ந்து அச்சத்துடன் பயணித்து குடிநீரைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது பிள்ளைகள் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு செல்வதில் சிரமம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தொடரும் வறட்சி நிலைமை காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 2000க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் பிரதான தொழிலாக காணப்படும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பும், என்பன இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்குரிய பச்சைப் புற்கள் தற்போது கருகிய நிலையில் காணப்படுவதாகவும் கால்நடைகள் குடிநீர் இன்றி அலைந்து திரிவதாகவும் தெரிவிக்கும் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்று குழாய் மூலமான குடிநீரைப் பெற்றுத்தர துறைசார்ந்தவர்கள் உடன் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகள் வரட்சி காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனது பயன்தரும் மரங்களும், பாதிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் நீண்ட தூரம் பயணித்து குளிப்பதற்கு செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பன்ச்சேனை, கரவெட்டி. நெடியமடு, தாண்டியடி, காந்திநகர், உன்னிச்சை, உள்ளிட்ட பல கிராம மக்கள் இந்த வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குடிநீர் வழங்கல் திட்டம் அம்மக்கள் வாழ்கின்ற, வவுனதீவில் காணப்படுகின்ற போதிலும், அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள கிராம மக்களுக்கு அத்திட்டத்தினூடாக வினியோகிக்கப்படும் குடிநீர் கிடைக்காமல் அவர்கள் காட்டு யானை தாக்கத்திற்கு உள்ளாவதும் தொடர் கதையாகவே இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு உரிய குடிநீர் வழங்குறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.