போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆதரவு!

போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, 9/11 ஆணைக்குழுவால் Department of Homeland Security என்ற புதிய பிரிவு நிறுவப்பட்டதாகவும், 30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாடாக தற்போது போதைப்பொருள் பயங்கரவாத கடத்தலுக்கு பலியாகியுள்ளதாகவும், பாடசாலை கல்வித் துறையிலும் படையெடுத்துள்ளதாகவும், ஆதிக்கம் செலுத்துவிட்டதாகவும், எனவே, போதைப்பொருள் கடத்தலை அழிப்பது தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் எல்லா நேரங்களிலும் இது விவாதிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் சாதகமான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டால் எதிர்க்கட்சி என்ற வகையில் நிபந்தனையற்று ஆதரவளிப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையை நாடளாவிய ரீதியில் விரைவில் இல்லாதொழிக்கும் நோக்கில், அதுதொடர்பான செயற்பாடுகளுக்கான நியமங்கள் மற்றும் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தெரிவுக்குழு நேற்று (23) கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான துல்லியமான தரவு உள்ளதா என்பதில் சிக்கல் உள்ளதாகவும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பியர் பேமிட் வழங்கப்பட்டாலும் சிகரெட் மற்றும் அல்கஹோல் உரிமப் பத்திரம் வழங்குவது கூட குறைவாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறான பேமிட் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுமாயின் போதைப்பொருள் பாவனைசார் கலாசாரம் உருவாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளின் சுற்றுமதில் சுவர்களில் இருந்து போதைப்பொருள் வீசப்படும் நிலை கூட உள்ளதாகவும், 30 ஆண்டுகால பயங்கரவாதம் அழிக்கப்பட்ட நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளதாகவும், இதற்கு கடுமையான சட்ட கட்டமைப்பு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலைக் கடந்த பொருள் கட்டுப்பாட்டுடன் கூடிய வலுவான போதைப்பொருள் எதிர்ப்புப் படை நாட்டிற்குத் தேவை என்றும், அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அதனை ஒரே நோக்கத்துடன் செயற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். அரசியலமைப்பு ரீதியாக அது மாறாத சட்டமாக மாற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்க வேண்டும் என்றும், அத்தகைய அதிகாரிகளை பாராட்ட வேண்டும் என்றும், இதுபோன்ற விடயங்களுக்கு உலகில் நல்ல மாதிரிகள் உள்ளன என்றும், அவற்றைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தில் வெற்றி பெற சில வெற்றிகரமான வழிமுறைகளைப் பயன்படுத்தியது போல இதிலும் ஜனாதிபதி செயலணி போன்ற வெற்றிகரமான முறைமைசார் வேலைத்திட்டத்தை ஏற்படுத்தி அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், போதைப்பொருளை அழிப்பதும் ஒரு யுத்தமென்பதால், அது பாடசாலையை ஆக்கிரமிக்க அனுமதிக்காமல் அழிக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக சமூகத்தை மையப்படுத்தியதான வேலைத்திட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Previous articleஆசிரியர் வெற்றிடங்களை தீர்க்க நடவடிக்கை!
Next articleதொற்று நோய் குறித்து எச்சரிக்கை விடுப்பு!