யாழில் வறட்சியால் 22,044 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 70,408 நபர்களைக் கொண்ட 22,044 குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிநீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமெனவும் அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது நெடுந்தீவு உட்பட தங்களால் நீர்வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கக் கூடிய வகையில் நீர்வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான சேவைகள் 18 குடிநீர் மூலங்கள் மூலமாக செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் தெரிவித்தார்.

அதே வேளை எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு நீர்ப் பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

Previous articleவீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு!
Next articleசிகிரியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!