பெரும்பான்மை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேரேர்

பெரும்பான்மையின மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் 2500 வருடகால புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல்வாதிகளே நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள். ஆனால் பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் மிக மோசமாக பாதிப்பு

பொருளாதார பாதிப்பால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஒரு நாள் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாட்டை மீட்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

கடன் பெறுவதையும் மிகுதியாக உள்ள தேசிய வளங்களையும் ஏலத்தில் விடுவதையும் தவிர இந்த அரசாங்கத்திடம் பொருளாதார மீட்சித் திட்டங்களும் கிடையாது. நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அரசாங்கம் செயற்படும் போது நாங்களும் அதற்கு ஏற்றவாறு செயற்படுவோம்.

பெரும்பான்மையின மக்களுக்கான எச்சரிக்கை

மழைக்காலத்துக்கு வெளியில் வரும் அட்டைப் பூச்சிகளை போல் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நெருங்கும் போது அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசனம் பாதுகாப்பு, இனம் தொடர்பில் கருத்துரைத்துக் கொண்டு வெளிவருவார்கள்.

எனினும் பெரும்பான்மையின மக்கள் இம்முறை சிறந்த தீர்மானத்தை எடுக்காவிட்டால் 2500 ஆண்டுகால பழமை வாய்ந்த புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

Previous articleயாழில் அதிக போதைப்பொருள் பாவனையால் நபர் இளைஞன்உயிரிழப்பு!
Next articleயாழில் ஆட்களற்ற வீடுகளில் ஒன்றுகூடும் போதைப் பிரியர்கள்