இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி சிறையில்

15,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (30) இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து தவறு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இரு உத்தியோகத்தர்களும் 25,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ள நிலையில், அதில் 12,500 ரூபாயை முன்னதாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

எஞ்சிய தொகையை செலுத்தும் வரை குறித்த முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டையை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பறிமுதல் செய்து வைத்திருந்ததாகவும், அதனை மீள வழங்குவதற்கு 15,000 ரூபாய் பணத்தினை கோரியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த 15,000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே மல்லாவி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.