உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்த தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை நியமிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூல காரணமாக ஒருவர் செயற்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு விசாரணைகள் முடிவடைந்தவுடன் இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Previous articleஅவுஸ்ரேலியாவில் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம்
Next articleஇன்றைய ராசிபலன்11.09.2023