வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் 80சதவீதமான இலங்கையர்கள்

நாட்டிலுள்ள 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை எதிர்பார்த்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

களனிப் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 25 முதல் 36 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 70 சதவீதமானவர்கள் வெளிநாடு செல்ல விரும்புவதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 3,500 பேரின் கருத்துகள் பெறப்பட்டதுடன் 3 அளவுகோல்களின் கீழ் இதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்கான காரணம், வெளிநாடு செல்லக் கூடாது என்பதற்கான காரணம், வெளிநாட்டில் இருந்தால் மீண்டும் இந்த நாட்டுக்கு வருவதா இல்லையா என்ற அடிப்படைகளில் ஆய்வுக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 57 சதவீதமானோர் எதிர்வரும் காலங்களில் நாட்டிலிருந்து வெளியேற விரும்புவதாகவும், 43 சதவீதமானோர் நாட்டிலேயே இருக்க விரும்பதாகவும் களனி பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ பிரிவின் பேராசிரியர் பிரசாதினி கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து வெளியேற விரும்புபவர்களில் 75 சதவீதமானோர் தாம் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவதற்கான பிரதான காரணமாக அரசாங்கத்துக்கு எதிர்காலம் பற்றிய தெளிவான சிந்தனை இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட தேவைகளை பூர்த்திசெய்வதில் உள்ள சிரமம் மற்றும் அநாவசியமான வரிவிதிப்பு ஆகியவற்றினாலும் அவர்கள் வெளிநாடு செல்ல விரும்புவதாக பேராசிரியர் பிரசாதினி கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டிலிருந்து வெளியேற விரும்பாதவர்கள், தமது பெற்றோரை கவனித்து கொள்ளுதல், பிள்ளைகளை வெளிநாட்டில் வளர்க்க விரும்பாமை மற்றும் நாட்டின் மீதுள்ள பற்று போன்ற காரணங்களை முன்வைத்துள்ளதாக களனி பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ பிரிவின் பேராசிரியர் பிரசாதினி கமகே குறிப்பிட்டுள்ளார்.

Previous articleசைபர் தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை
Next articleகாட்டு யானை தாக்கி இருவர் பலி