பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவானார்

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் – என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி இடம்பெற்றது.

அதில்,  முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். 

நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் – என் கட்சிக்கு 75 இடங்களும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.  

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் பிஎம்எல் -என் கட்சி புதிய அரசை அமைக்க தீர்மானித்தது. 

அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.  

இம்ரான் கான் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் முன்னிறுத்தப்பட்டார். 

அந்நாட்டின் பாராளுமன்றில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடந்தது.

 அதில் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வானார்.

 ஒமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.  

வெற்றி பெற்ற ஷெபாஸ் ஷெரீப் தனது சகோதரர் நவாசை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை  பகிர்ந்து கொண்டார்.

பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் பேசுகையில், பயங்கரவாதம் நாட்டில் இருந்து அடியோடு அகற்றப்படும். புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும், என்றார்​.