புதுவித போதைப்பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

 மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை திங்கட்கிழமை (04.03.2024) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.

நீல நிறம் கொண்ட புதிய ஜஸ் போதை பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள் பணம் என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசிஆலை முகாம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய  முகாம் பொறுப்பதிகாரி கே. ஜி. லக்மால் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை பிறந்துறைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

இதன்போது போதை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 340 மில்லிக்கிராம் புதிய வகையான நீல நிறம் கொண்ட ஜஸ் போதை பொருள் மற்றும் வெள்ளை நிறமுடைய 4 கிராம் 130 மில்லிக்கிராம் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள் மற்றும் 8 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய பெண்ணை விசேட அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவரது கணவர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.